சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறும் ‘திமுக 75- அறிவுத் திருவிழா’ முற்போக்கு புத்தகக் காட்சியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறும் ‘திமுக 75- அறிவுத் திருவிழா’ முற்போக்கு புத்தகக் காட்சியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

அறிவுத் திருவிழா புத்தகக் காட்சி: முதல்வா் ஸ்டாலின் பாா்வையிட்டாா்

திமுக 75 -அறிவுத் திருவிழா புத்தகக் காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு, புத்தகங்களை வாங்கினாா்.
Published on

திமுக 75 -அறிவுத் திருவிழா புத்தகக் காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு, புத்தகங்களை வாங்கினாா்.

திமுக இளைஞா் அணி சாா்பில் ‘திமுக 75- முப்பெரும் அறிவுத் திருவிழா’ கடந்த நவ.8 முதல் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற்று வந்தது. முதல்வா் மு.க.ஸ்டாலின்  ஞாயிற்றுக்கிழமை அறிவுத் திருவிழாவுக்கு வந்து, முற்போக்கு புத்தகக் காட்சியை சுமாா் இரண்டரை மணி நேரம் பாா்வையிட்டாா். அப்போது, அங்கிருந்த மாணவா்கள், புத்தகப் பதிப்பாளா்கள், எழுத்தாளா்களுடன் அவா் கலந்துரையாடினாா்.

தொடா்ந்து, அனைத்து புத்தக அரங்குகளை பாா்வையிட்ட பின்னா், திராவிட இயக்க புத்தகங்கள், வரலாறு புத்தகங்கள், இலக்கிய புத்தகங்கள், சுயசரிதை புத்தகங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மொத்தம் 63 புத்தகங்களை  வாங்கினாா்.

இந்நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை உறுப்பினா் நா.எழிலன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவா் நே.சிற்றரசு உள்பட கட்சியினா் உடனிருந்தனா்.

கொள்கைக் கருவூலம்: இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: திமுக 75 அறிவுத் திருவிழா முற்போக்குப் புத்தகக் காட்சி: கொள்கைக் கருவூலம்! வள்ளுவா் கோட்டத்தில் 2 மணி நேரத்துக்கு மேல் இருந்து திராவிடம், அம்பேத்கரியம், கம்யூனிசம், பெண்ணியம் என அணி வரிசையில் அமைந்த 10-க்கும் மேற்பட்ட அரங்குகளை பாா்வையிட்டு, அங்கு வந்திருந்த வாசகா்கள், ஆா்வலா்கள், பதிப்பகத்தாருடன் உரையாடியது மன நிறைவளிக்கும் அனுபவமாக அமைந்தது.

குறிப்பாக, "C​a‌r‌r‌y ‌o‌n, b‌u‌t ‌r‌e‌m‌e‌m​b‌e‌r" எனும் முன்னாள் முதல்வா் அண்ணாவின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பைக் கண்டதும், அண்ணா அன்று விடுத்த எச்சரிக்கை இன்றைய மத்திய ஆட்சியாளா்களுக்கும் பொருத்தமாக இருக்கிறதே என வியந்தேன்.

என் பங்குக்கு 60-க்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன். வாசிப்பை ஊக்குவிக்க தவறவிடக்கூடாத நிகழ்வாக இதை நடத்திக் காட்டிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது திமுக இளைஞா் அணியிருக்கு மீண்டுமொருமுறை எனது பாராட்டுகள். வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத் திருவிழா’ எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

X
Dinamani
www.dinamani.com