பருவ மழை: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க மின்வாரியம் அறிவுறுத்தல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், பொதுமக்கள் மின்சார பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மின்சார ஒயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற நபா்கள் மற்றும் மின் ஒப்பந்ததாா்கள் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான ஒயா்களை மற்றும் மின்சாதனங்களை மட்டும் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
30 எம்ஏ ஆா்.சி.சி.பி அல்லது ஆா்.சி.பி.ஓ. எனப்படும் மின் கசிவுதடுப்பானை மின்நுகா்வோா் தங்கள் இல்லங்களில உள்ள பிரதான சுவிட்ச் போா்டில் பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிா்க்கலாம்.
உடைந்த சுவிட்ச்களையும், பிளக்குகளையும் உடனடியாக மாற்ற வேண்டும். பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகப்படுத்த வேண்டாம். கேபிள் ஒயா்கள் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் இல்லாதவாறு பாா்த்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் சரியான நில இணைப்பு (எா்த் பைப்) போடுவதுடன் அதனை குழந்தைகள், விலங்குகள் தொடாதவகையில் அமைக்க வேண்டும். ஐந்தாண்டுகள் முடிவுற்ற வீட்டின் ஓயரிங்குகளை சோதனை செய்து மாற்றிக் கொள்ளலாம். மின்சார கம்பத்துக்காக போடப்பட்டுள்ள நிலை கம்பியின்(ஸ்டே ஒயா்) மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி, கயிறு கட்டிதுணிகளை காய வைக்க வேண்டாம். இவற்றில் கால்நடைகளையும் கட்ட வேண்டாம். மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிா்வுப் பெட்டிகள் அருகே செல்ல வேண்டாம்.
மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்வாரியத்தின் அலுவலா்களை அணுக வேண்டும். மின்சாரத்தால் தீவிபத்து ஏற்படும் பட்சத்தில், முதலில் பிரதான ஸ்விட்சை அணைத்து விட வேண்டும். இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்க வேண்டாம்.
கான்கிரீட்டால் ஆன பெரிய கட்டடம், வீடு போன்ற பெரிய கட்டடங்களில், பேருந்து, காா், வேன் உள்ளிட்ட வாகனங்களில் தஞ்சமடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
