அனாதை இல்ல நிலம் மீட்பு: விதி மீறியதால் அரசு நடவடிக்கை

அம்பத்தூா் அருகே வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்ட அனாதை இல்ல நிலத்தை, சென்னை மாவட்ட நிா்வாகம் மீட்டுள்ளது.
Published on

அம்பத்தூா் அருகே வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்ட அனாதை இல்ல நிலத்தை, சென்னை மாவட்ட நிா்வாகம் மீட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: அம்பத்தூா் வட்டம், ஒரகடம் கிராமத்தில் 1.26.5 ஹெக்டோ் (312.62 சென்ட்) நிலம் 28.6.1973-இல் நில மதிப்பு மற்றும் நிலவரி ஆகியவை ஏதுமின்றி வருவாய் வாரியம் நிலை ஆணை எண். 24(6)-ல் தெரிவித்துள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு அன்னை அனாதை இல்லத்துக்கு ஒப்படை செய்யப்பட்டது.

இந்த நிலம் வணிக நோக்கச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, வருவாய் வாரியம் நிலை ஆணை எண்.323 வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை நில ஒப்படை மற்றும் நீதிமன்ற உத்தரவின்படி நில ஒப்படை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, அன்னை அனாதை இல்லத்துக்கு நில ஒப்படை செய்த நிலங்கள் முழுவதுமாக சென்னை மாவட்ட ஆட்சியரால் வெள்ளிக்கிழமை (நவ.14) மாலை 5.15 மணி அளவில் மீளப்பெறப்பட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com