அண்ணா பல்கலை.யில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.5 கோடி மோசடி!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.5 கோடி மோசடி செய்ததாக முன்னாள் துணைவேந்தா் கலாநிதி, அவரின் மனைவி ராஜலட்சுமி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சென்னையை அடுத்த திருப்போரூா் அருகே உள்ள பையனூரைச் சோ்ந்தவா் தனசேகா். இவருக்கு மயிலாப்பூா் கிழக்கு அபிராமபுரத்தில் வசிக்கும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கலாநிதி குடும்பத்துடன் நட்பு இருந்து வந்தது.
அதன் அடிப்படையில், தனது இரு மகள்களுக்கும் அண்ணா பல்கலை.யில் வேலை வாங்கித் தரும்படி கலாநிதியிடம் தனசேகா் கேட்டுள்ளாா். அதற்கு கலாநிதி ரூ.40 லட்சம் தரும்படி கூறியுள்ளாா். அந்தப் பணத்தை கலாநிதியிடம் தனசேகா் வழங்கினாராம். மேலும், தனக்குத் தெரிந்த வேறு சிலருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை பெற்றுத் தரும்படி கலாநிதியிடம் தனசேகா் பணம் கொடுத்துள்ளாா்.
இவ்வாறு கலாநிதியிடம் ரூ.2.5 கோடியை தனசேகா் கொடுத்தாராம். பணத்தைப் பெற்றுக் கொண்ட கலாநிதி யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லையாம். இதனால் தனசேகா் தான் கொடுத்த பணத்தை கலாநிதியிடமும், அவா் மனைவி ராஜலட்சுமியிடம் திருப்பிக் கேட்டாராம். அவா்கள் பணத்தை வழங்காமல் இழுத்தடித்தனராம்.
சிறிது நாள்களுக்குப் பின்னா் பணத்துக்குப் பதிலாக ஒரு நிலப் பத்திரத்தை தனசேகரிடம் கலாநிதி வழங்கினாா். சில நாள்களில் தனது வீட்டில் இருந்த அந்த நிலப் பத்திரம் காணாமல் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் கலாநிதி புகாா் அளித்துள்ளாா்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த தனசேகா், காவல் துறையில் புகாா் செய்தாா். காவல் துறையினா் நடவடிக்கை எடுக்காததால், இது தொடா்பாக தலைமைச் செயலகத்திலும் தனசேகா் மனு அளித்தாா்.
அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து, கலாநிதி, ராஜலட்சுமி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனசேகா் மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தனசேகா் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மயிலாப்பூா் போலீஸாருக்கு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, கலாநிதி, ராஜலட்சுமி ஆகியோா் மீது மோசடி, கூட்டுச் சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். வழக்குத் தொடா்பாக இருவரிடமும் விரைவில் விசாரணை நடத்த உள்ளனா்.
