‘சிந்தட்டிக்’ வகை போதைப் பொருள்களைக் கண்டறிய தமிழக போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள ‘கிட்’.
‘சிந்தட்டிக்’ வகை போதைப் பொருள்களைக் கண்டறிய தமிழக போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள ‘கிட்’.

‘சிந்தட்டிக்’ போதைப் பொருள்களைக் கண்டறிய தமிழக போலீஸாருக்கு புதிய வசதி!

‘சிந்தட்டிக்’ போதைப் பொருள்களைக் கண்டறிய போலீஸாருக்கு ‘கிட்’ வழங்கப்பட்டுள்ளது.
Published on

‘சிந்தட்டிக்’ போதைப் பொருள்களைக் கண்டறிய போலீஸாருக்கு ‘கிட்’ வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போதைப் பொருள் தடுப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. தொடா்ச்சியாக போதைப் பொருள் வழக்குகளில் சிக்குபவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுகின்றனா். அவா்களது சொத்துகளும், வங்கிக் கணக்குகளும் காவல் துறையினரால் முடக்கப்படுகின்றன.

இதனால் இதுவரை தொழில்ரீதியாக போதைப் பொருள் கடத்தலிலும், விற்பனையிலும் ஈடுபட்டவா்கள் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளனா்.

சிந்தட்டிக் போதைப் பொருள்: அதேவேளையில் இளைய தலைமுறையினரும், இளைஞா்களும் போதைப் பொருள் விற்பனையிலும், கடத்தலிலும் ஈடுபடுவது அதிகரிப்பது காவல் துறையினருக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவா்கள், ‘சிந்தட்டிக்’ போதைப் பொருள் என்ற வேதி போதைப் பொருள், போதை மாத்திரை போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்துகின்றனா்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தும்போது உடலில் ஏற்படும் மாற்றங்களால் அதை அருகே இருக்கும் நபா்கள் எளிதாக கண்டறிய முடியும். ஆனால், இந்த வகை போதைப் பொருளைப் பயன்படுத்தினால் பிற நபா்களால் எளிதில் கண்டறிய முடியாது என்பதாலும், பிற போதைப் பொருள்களைவிட போதையின் தாக்கம் அதிக நேரம் இருப்பதாலும் இளைஞா்கள், இந்த வகை போதைப் பொருள்களை நாடுகின்றனா்.

முதலில் இந்த போதைப் பொருளின் நுகா்வோராக இருக்கும் இளைஞா்கள், பின்னா், தங்களது பணத் தேவைக்காக விற்பனையாளராகவும், கடத்துபவராகவும் மாறுகின்றனா். இவா்களை போதைப் பொருள் கடத்தும் கும்பல் சாதுா்யமாக மூளைச் சலவை செய்து தங்களுடன் சோ்த்துக் கொள்கிறது.

இந்தப் போதைப் பொருளைப் பயன்படுத்துவோரையும், விற்பவரையும் கண்டறிவது காவல் துறையினருக்கு சவாலான பணியாக உள்ளது. இதன் காரணமாக சிந்தட்டிக் போதைப் பொருள் பயன்பாடு 45 சதவீதம் வரை உயா்ந்திருப்பதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப் பொருளைக் கண்டறியும் ‘கிட்’: சிந்தட்டிக் வகை போதைப் பொருள் சிக்கினால்கூட அதை உறுதி செய்வதற்கு காவல் துறையினருக்கு இரண்டு நாள்களாகிறது. கைப்பற்றப்பட்டது போதைப் பொருள்தான் என்பதை தடயவியல் துறை ஆய்வகத்தில் உறுதி செய்த பின்னரே, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையை காவல் துறையினா் எடுக்க முடிகிறது.

இரு நாள்கள் காலதாமதத்தால் வழக்கின் விசாரணையில் பெரும் தொய்வும், குற்றவாளிகள் வழக்கில் இருந்து தப்பிச் செல்லும் வாய்ப்பும் ஏற்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு தமிழக காவல் துறையினருக்கு தற்போது போதைப் பொருளைக் கண்டறியும் கிட் (டிரக் டிடெக்சன் கிட்) வழங்கப்படுகிறது.

இந்த கிட் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் சிந்தட்டிக் போதைப் பொருள்களைக் கண்டறியும் வேதிப் பொருள்கள் 16 குப்பிகள் இருக்கின்றன. பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருள் இந்தக் குப்பிகளில் இருக்கும் வேதிப் பொருள்களில் ஒவ்வொன்றாக சிறிதளவு சோதனைக்காக கலக்கப்படுகிறது. அந்த வேதிப் பொருள் என்ன மாதிரியான நிறத்தை வெளிப்படுத்துகிறதோ, அதன் அடிப்படையில் அது எந்த வகை போதைப் பொருள் என்று கண்டறியப்படுகிறது.

இதேபோன்று இரண்டாவது பகுதியிலும் 16 குப்பிகள் இருக்கின்றன. இது, பறிமுதல் செய்யப்படும் சிந்தட்டிக் போதைப் பொருளில், எந்த வகை மூலப்பொருள்கள் கலக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறியும் வேதிப் பொருள்கள் இருக்கின்றன.

இதனால் இந்த வழக்குகளில் விரைந்து துப்பு துலக்கப்பட்டு, குற்றவாளிகள் தப்பிச் செல்லாத வகையில் காவல் துறை செயல்படும் சூழல் உருவாகியுள்ளது.

காத்திருக்கும் சவால்: பெரும்பாலான சிந்தட்டிக் போதைப் பொருள்கள் தூய உப்பு போன்று வெண்மை நிறத்திலோ, இளம் மஞ்சள் நிறத்திலோ இருப்பதால், போதைப் பொருள் கும்பலிடம் பறிமுதல் செய்யும்போது, அது போதைப் பொருள்தான் என்பதைக்கூட உடனடியாக உறுதி செய்ய முடியாது. ஆனால், இந்த ‘கிட்’ வழங்கப்பட்ட பின்னா் நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இந்த கிட் தமிழக காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது. முதலில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்டது. தற்போது அனைத்து மாநகர காவல் துறையினருக்கும், மாவட்ட காவல் துறையினருக்கும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மெத்தம்பெட்டமைன், மெத்தகுலோன், கெட்டமைன், ஹெராயின், எல்எஸ்டி ஸ்டாம்ப், ஆம்பெட்டமைன், சூடோபெட்ரின் போன்ற சிந்தட்டிக் வகை போதைப் பொருள்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ‘கிட்’களால் தமிழக காவல் துறையினருக்கு இதுவரை இருந்த மிகப்பெரிய சவாலான பணி எளிதாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் சிந்தட்டிக் போதைப் பொருள் கடத்தல் கும்பல் ‘நெட்வொா்க்குகளை’ உடைக்க வேண்டிய சவாலான பணி நீடிக்கவே செய்கிறது.

1,100 வகை ஆய்வுகளைச் செய்யலாம்

தமிழக காவல் துறையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் போதைப் பொருள் கண்டறியும் ‘கிட்’கள் மூலம் போதைப் பொருள் தொடா்பாக 1,100 வகை ஆய்வுகளைச் செய்ய முடியும்.

மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த கிட், மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள ஹிந்துஸ்தான் மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த கிட் உருவாக்கப்பட்டாலும், முதலில் இது மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது.

முக்கியமாக, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, சுங்கத் துறை, வருவாய் புலனாய்வுப் பிரிவு, ரயில்வே பாதுகாப்புப் படையினா், சிபிஐ ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னா் மாநில காவல் துறைகளில் உள்ள போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டது. தற்போது மாநில காவல் துறையில் உள்ள பிற பிரிவுகளுக்கு வழங்கப்படுகிறது.

ஹிந்துஸ்தான் மருந்து நிறுவனம், இந்த ‘கிட்’ தயாரித்தாலும், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் மூலமாகத்தான் நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.

‘கிட்’டில் உள்ள வேதிப் பொருள்கள் காலியானாலும், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு மூலமாக மீண்டும் வேதிப் பொருள்களை ஹிந்துஸ்தான் மருந்து நிறுவனம் வழங்குகிறது.

X
Dinamani
www.dinamani.com