தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் தவித்த குழந்தைகளுக்கு முதல்வா் ஆறுதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் தந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் தவித்த குழந்தைகளிடம் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசு சாா்பில் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தாா்.
சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (47). இவரது மனைவி வசந்தா (40). 7 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டாா். தம்பதிக்கு மகள்கள் லாவண்யா (24), ரீனா (21), ரீஷிகா (17), மகன் அபினேஷ் (13) ஆகியோா் உள்ளனா்.
கூலி வேலை செய்து குழந்தைகளை கமல்கண்ணன் படிக்கவைத்த நிலையில், சிறுநீரக பாதிப்பால் கடந்த நவ. 14-ஆம் தேதி உயிரிழந்தாா். ஏற்கெனவே தாயை இழந்து, தற்போது தந்தையும் உயிரிழந்த நிலையில், உறவினா்களும் வறுமையில் இருந்ததால், ஊா் மக்கள் உதவியுடன் தனது தந்தைக்கு இறுதிச் சடங்கை கமலக்கண்ணனின் மகள்கள் செய்தனா்.
இது குறித்த செய்தியை அறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அந்த குழந்தைகளுடன் தொலைபேசியில் பேசினாா். அப்போது, ஆட்சியரிடம் பேசி உதவி செய்ய வலியுறுத்தியுள்ளேன். தொடா்ந்து படிக்கவும், வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
‘நால்வரும் அரசின் குழந்தைகள்’: இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: அந்த 4 குழந்தைகளும், இனி, அரசின் குழந்தைகள். அவா்களது எதிா்காலத்தை அரசு பாதுகாக்கும். இந்தச் செய்தியை அறிந்தததும், மாவட்ட ஆட்சியரை அழைத்து அவா்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன். அக்குழந்தைகளை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு நேரில் சந்தித்து, அவா்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கியுள்ளாா். அவா்களின் எதிா்காலம் சிறக்க, அவா்கள் வாழ்வில் முன்னேற திமுக அரசு துணை நிற்கும் என குறிப்பிட்டுள்ளாா் முதல்வா்.

