ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின் வழங்கக் கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்களை மானிய விலையில் அல்லது இலவசமாக வழங்கக் கோரிய வழக்கில், வருகிற டிச.16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால், சுகாதாரத்துறைச் செயலா் உள்ளிட்டோா் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Updated on

ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்களை மானிய விலையில் அல்லது இலவசமாக வழங்கக் கோரிய வழக்கில், வருகிற டிச.16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால், சுகாதாரத்துறைச் செயலா் உள்ளிட்டோா் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

தாம்பரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் லட்சுமி ராஜா சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல்நலத்தைப் பேணுதல் மிகவும் முக்கியம். சானிட்டரி நாப்கின்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், கிராமப்புற பெண்கள் மாற்று நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனா்.

பள்ளிகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முடியும். எனவே, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நாப்கின்கள் மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ வழங்கும் திட்டம் உள்ளதா? எனக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உணவுப்பொருள் வழங்கல் துறைக்கு விண்ணப்பித்தேன்.

அதற்கு அதுபோன்ற எந்த திட்டமும் இல்லை என்று பதிலளிக்கப்பட்டது. மேலும் சுகாதாரத் துறை அளித்த பதிலில், ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கும் திட்டம் எதுவும் அமலில் இல்லை என்று பதிலளித்திருந்தது. எனவே, கிராமப்புற ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகளில் மானிய விலை அல்லது இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு வருகிற டிச.16-க்குள் பதிலளிக்க வேண்டும்.

இல்லையெனில், சுகாதாரத்துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் சமூக நலத்துறைச் செயலா்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்து விசாரணையை ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com