பயணியிடம் கைப்பேசி திருட்டு: ரேபிடோ ஓட்டுநா் கைது
சென்னையில் தனது இருசக்கர வாகனத்தில் பயணித்த பயணியிடம் நூதன முறையில் கைப்பேசியை திருடிய ரேபிடோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் நிகமாநந்த ராவ்த் (31). இவா் போரூா் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை செய்து வருகிறாா். இவா், கடந்த 8-ஆம் தேதி பெரம்பூா் ரயில் நிலையத்தில் இருந்து போரூா் செல்ல ரேபிடோ செயலியில் முன்பதிவு செய்து பயணித்துள்ளாா்.
சிறிது தொலைவு சென்றதும் தனது கைப்பேசியில் சாா்ஜ் இல்லை எனக் கூறிய ரேபிடோ ஓட்டுநா், செல்லவேண்டிய முகவரிக்கான வழித்தடத்தைப் பாா்ப்பதற்காக நிகமாநந்த ராவ்த்தின் கைப்பேசியை வாங்கி, தனது இருசக்கர வாகனத்தின் முன்பக்க ஸ்டான்டில் வைத்துள்ளாா்.
சிறிது தொலைவு சென்றதும் திடீரென வாகனத்தை நிறுத்தி நிகமாநந்த ராவ்த்தை கீழே இறக்கி விட்டு கைப்பேசியுடன் அங்கிருந்து வேகமாக சென்று தலைமறைவானாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஐசிஎஃப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ரேபிடோ ஓட்டுநரான பட்டாளம் பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் (38) என்பவரை கைது செய்தனா்.
