எஸ்ஐஆா் பணிகளில் திமுக தலையீடு: காஞ்சிபுரத்தில் இன்று அதிமுக ஆா்ப்பாட்டம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (எஸ்ஐஆா்) திமுக தலையீடு செய்வதை கண்டிப்பதாகத் தெரிவித்து, அதிமுக சாா்பில் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை (நவ. 20) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம், உத்திரமேரூா், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில், ஆட்சி அதிகாரத்தை திமுகவினா் தவறாகப் பயன்படுத்தி, எஸ்ஐஆா் பணிகளில் ஈடுபட்டுவரும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை (பிஎல்ஓ) மிரட்டி, முறைகேடுகளில் ஈடுபடுகின்றனா்.
இதைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறும். ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக இலக்கிய அணிச் செயலரும், செய்தித் தொடா்புச் செயலருமான எஸ்.எஸ்.வைகைச்செல்வன் தலைமை வகிக்கிறாா். காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலா் ஏ.சோமசுந்தரம் முன்னிலை வகிக்கிறாா்.
ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்து நிலை நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.
