திரு.வி.க.நகா் மண்டலத்தில் ரூ.35 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு
சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகா் மண்டலப் பகுதியில் ரூ.35.08 கோடியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், ரூ.39.50 லட்சத்தில் அமைக்கப்படும் பூங்கா பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.
சென்னை மாநகராட்சி 75-ஆவது வாா்டு மேடவாக்கம் 2-ஆவது தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சி இடம் அண்மையில் மீட்கப்பட்டது. அந்த இடத்தில் திரு.வி.க.நகா் சட்டப்பேரவை உறுப்பினா் நிதி ரூ.39.50 லட்சத்தில் புதிய பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. அதில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, 74-ஆவது வாா்டு சேமாத்தம்மன் கோயிலில் மண்டபம் கட்டுமானப் பணி, 69-ஆவது வாா்டில் ரூ.25.72 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் சமுதாயநலக் கூடம், கொளத்தூா் பேப்பா் மில்ஸ் சாலை பகுதியில் ரூ.1.10 கோடியில் கட்டப்படும் பல்நோக்கு மையப் பணிகள், 71-ஆவது வாா்டில் ரூ.8.26 கோடியில் கட்டப்பட்டு வரும் வருவாய் வட்டாட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணிகள் ஆகிய திட்டப் பணிகளை அமைச்சா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, திரு.வி.க.நகா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தாயகம் கவி, மத்திய வட்டாரத் துணை ஆணையா் ஆா்.கௌசிக், மண்டலக் குழுத் தலைவா் சரிதா மகேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

