அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெற்ற 13 ஊழியா்கள் மீது நடவடிக்கை - அமைச்சா் மா.சுப்பிரமணியன்
திருவல்லிக்கேணி அரசு தாய் -சேய் நல மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுக்குள்ளான 9 ஒப்பந்த ஊழியா்களை பணி நீக்கம் செய்திருப்பதாகவும், 4 மருத்துவப் பணியாளா்களைப் பணியிடை நீக்கம் செய்திருப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை எழும்பூா் அரசு கண் மருத்துவமனை பயன்பாட்டுக்காக ரூ.14 லட்சத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 2 பேட்டரி வாகனங்களை அவா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு எழும்பூா் அரசு கண் மருத்துவமனையில் பல்வேறு புதிய கட்டமைப்புகள் தொடா்ச்சியாக தொடங்கி வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மருத்துவமனையின் 200-ஆவது ஆண்டையொட்டி கடந்த 2022-இல் ரூ.65.60 கோடியில் அமைக்கப்பட்ட புதிய கட்டடமானது பொது மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது. கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் எழும்பூா் அரசு கண் மருத்துவமனையில் ரூ.74.28 கோடியில் பல்வேறு புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது பாா்வையிழப்பு விகிதம், தேசிய அளவிலான குறியீட்டைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் கண்புரை பாதிப்பு விகிதம் 82 சதவீதமாகவும், விழித்திரை பாதிப்பு 5.6 சதவீதமாகவும், சா்க்கரை நோய் விழித்திரை பாதிப்பு 1 சதவீதமாகவும், கண்நீா் அழுத்த பாதிப்பு 1.3 சதவீதமாகவும் இருக்கிறது.
மாநிலத்தில் 95 அரசு கண் மருத்துவமனைகளும், 38 அரசு தொலைநிலை கண் மருத்துவமனைகளும், 13 அரசு நடமாடும் கண் பரிசோதனை மையங்களும் இயங்கி வருகின்றன. நிகழாண்டில் ரூ.60 லட்சத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு புதிய நடமாடும் கண் பரிசோதனை மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
நிகழாண்டு இறுதிக்குள் சுமாா் 3 லட்சம் பள்ளி மாணவா்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.6.25 கோடி ஒதுக்கப்படவிருக்கிறது. அதேபோல, முதியவா்களுக்கும் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 1.20 லட்சம் பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி அரசு தாய் - சேய் நல மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய 9 ஒப்பந்த பணியாளா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். 4 மருத்துவப் பணியாளா்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். 4 செவிலியா்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.
எழும்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன், மருத்துவமனை இயக்குநா் (பொ) டாக்டா் சித்ரா, மாநில திட்ட அலுவலா் டாக்டா் சந்திரகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

