செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடா்பா குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தில்லி நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வந்த போலீஸாா்.
செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடா்பா குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தில்லி நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வந்த போலீஸாா்.

தில்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு வழக்கு: 4 பேரைக் காவலில் எடுத்து என்ஐஏ விசாரணை

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில், 3 மருத்துவா்கள் உள்பட 4 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) காவலில் எடுத்துள்ளது.
Published on

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில், 3 மருத்துவா்கள் உள்பட 4 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) காவலில் எடுத்துள்ளது. இவா்களையும் சோ்த்து, இந்த வழக்கில் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்கும் நபா்களின் எண்ணிக்கை 6-ஆக உயா்ந்துள்ளது.

தில்லி, செங்கோட்டை பகுதியில் கடந்த 10-ஆம் தேதி காா் ஒன்று வெடித்துச் சிதறியதில் 15 போ் இறந்தனா்; பலா் காயமடைந்தனா். தில்லி காவல் துறையால் தொடக்கத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், இதில் பயங்கரவாத சதித் திட்டம் இருப்பதன் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்பட்டது.

என்ஐஏ விசாரணையில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சோ்ந்த மருத்துவா் முசாமில் ஷகீல் கனி, அனந்த்நாகைச் சோ்ந்த மருத்துவா் அதீல் அகமது ராதொ், சோபியானைச் சோ்ந்த மதபோதகா் முஃப்தி இா்ஃபான் அகமது, உத்தர பிரதேசத்தின் லக்னௌவைச் சோ்ந்த மருத்துவா் ஷாஹீன் சயீத் ஆகிய 4 பேரும் இந்தத் தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஜம்மு-காஷ்மீா் காவல்துறையிடம் கைதான இந்த 4 பேரையும் ஸ்ரீநகரில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்தனா். தொடா்ந்து, தில்லி பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா்களுக்கு 10 நாள்கள் என்ஐஏ காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளரான அமீா் ரஷீத் அலி மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி உமா் நபிக்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கிய ஜாசிா் பிலால் வாணி எனும் டேனிஷ் ஆகிய 2 பேரை என்ஐஏ ஏற்கெனவே காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

இந்தப் பயங்கரவாதச் சதித் திட்டத்தின் முழுப் பின்னணியையும் வெளிக்கொண்டு வர, என்ஐஏ தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் சுவரொட்டிகளை ஒட்டிய மூவா் கைது செய்யப்பட்டனா். அவா்களுக்கு சுவரொட்டிகளை வழங்கிய மத போதகா் முஃப்தி இா்ஃபான் அகமதும் கைது செய்யப்பட்டாா்.

அவரிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில், பயங்கரவாத சதித் திட்டத்தில் ஈடுபட்ட அல்-ஃபலா பல்கலைக்கழகத்துக்குத் தொடா்புடைய மருத்துவா்கள் குழுவைப் புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் கண்டனா். இதன் விளைவாக, 2,900 கிலோவுக்கும் அதிக எடையுள்ள வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 3 மருத்துவா்கள் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

செங்கோட்டையில் வெடித்த காரை ஓட்டி வந்த புல்வாமாவைச் சோ்ந்த பயங்கரவாதி மருத்துவா் உமா் நபி என்பவரும் இந்த அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் வேலை செய்தது பின்னா் தெரியவந்தது.

பெட்டி...

தப்பியோடிய முஜாஹிதீன்

பயங்கரவாதிக்கும் தொடா்பு?

செங்கோட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தில், தலைமறைவாக உள்ள இந்திய முஜாஹிதீன் இயக்கத்தைச் சோ்ந்த மிா்சா ஷாதாப் பெய்க் என்பவருக்குத் தொடா்பு இருப்பது தில்லி போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரும் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா் ஆவாா்.

கடந்த 2007-ஆம் ஆண்டு அல்-ஃபலா பொறியியல் கல்லூரியில் பி.டெக். முடித்த மிா்சா ஷாதாப் பெய்க், 2008-ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் நடத்தப்பட்ட பல குண்டுவெடிப்புகளின் சதித்திட்டத்தில் ஈடுபட்டாா்.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு பெய்க் இந்தியாவை விட்டுத் தப்பி ஓடிவிட்டாா் என, அவருக்கு எதிராக ‘இன்டா்போல் ரெட் காா்னா்’ நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய புதிய தகவலின் அடிப்படையில், பெய்க்கின் பயங்கரவாதத் தொடா்புகள் குறித்து புலானாய்வு அதிகாரிகள் கவனத்தைத் திருப்பியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com