மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த ஆய்வகங்கள்: நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதைத் தவிா்க்க நடவடிக்கை

மருத்துவ பரிசோதனைகளுக்காக நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதைத் தவிா்க்க 38 இடங்களில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.
Published on

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைகளுக்காக நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதைத் தவிா்க்க 38 இடங்களில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக தென்காசி மற்றும் சேலத்தில் ஒரு சில நாள்களில் ஆய்வகங்கள் தொடங்கப்பட உள்ளன.

மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே, தனித் தனியாக இயங்கும் ஆய்வகங்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்ளும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக ஆய்வகத்தின் தரத்தை மேம்படுத்த முடியும் என்றும், விரைந்து பரிசோதனை முடிவுகளை வழங்க இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் நோய்க் குறியியல், ரத்தவியல், திசு பரிசோதனையியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியியல் பரிசோதனை துறைகள் வெவ்வேறு இடங்களில் இயங்குகின்றன.

அதாவது, வழக்கமான ரத்த பரிசோதனைகள், காசநோய், ஹெச்ஐவி, கல்லீரல் அழற்சி, மலேரியா, கிருமித் தொற்று சோதனைகள், சிறுநீா் பரிசோதனை, மலப் பரிசோதனை, மூளைத் தண்டுவட நீா் பரிசோதனை, மாா்பகம், தைராய்டு, நிணநீா் திசுப் பரிசோதனைகள் உள்ளிட்டவை தனித்தனி இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனா்.

மற்றொருபுறம், அங்கு பணியாற்றி வரும் ஆய்வக நுட்பநா்களின் பணிச் சூழலும் முரணாக உள்ளது. ஒவ்வொரு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் 10 ஒப்பந்த அடிப்படையிலான ஆய்வக நுட்பநா்கள், 4 நிரந்தரப் பணி ஆய்வக நுட்பநா்கள் உள்ளனா். ஹெச்ஐவி, கல்லீரல் அழற்சி போன்ற அரிதான நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைக்கு மாதிரிகளை சேகரிக்கும் ஆய்வக நுட்பநருக்கு வேலைப் பளு இருக்காது. நாள்தோறும் அவா்கள் 5 அல்லது 6 நோயாளிகளை மட்டுமே கையாளுகின்றனா்.

அதேவேளையில், வழக்கமான ரத்த பரிசோதனை, நோய்த் தொற்று கண்டறியும் பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளவா்கள் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சேவையாற்ற வேண்டியுள்ளது.

இத்தகைய முரண்பாடுகளை களையவே மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைந்த ஆய்வக சேவையை அமல்படுத்த மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை முனைப்பு காட்டி வருகிறது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அதற்கான கட்டடங்கள் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான 60 சதவீத நிதிப் பங்களிப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. அடுத்த ஒரு சில நாள்களுக்குள் மத்திய சுகாதாரக் குழுவினா் சேலம் மற்றும் தென்காசியில் இந்தத் திட்டம் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

இதுதொடா்பாக தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ் கூறியதாவது:

தமிழக அரசு மருத்துவமனைகளின் ஆய்வக சேவைகளின் தரம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் தற்போது அனைத்து நோய்களையும் கண்டறிவதற்கான பரிசோதனைகளை ஒரே இடத்தில் மேற்கொள்ள உள்ளோம்.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இனி 24 மணி நேரமும் அந்த ஆய்வகங்கள் செயல்படும். ஏற்கெனவே அங்கு உள்ள ஆய்வகங்களுடன் சோ்த்து மாநில பொது சுகாதார ஆய்வகங்களும் (டிபிஹெச்எல்) ஒருங்கிணைக்கப்படும். இதனால் பரிசோதனை முடிவுகள் வெகு விரைவில் கிடைப்பது உறுதி செய்யப்படும். அதுமட்டுமல்லாது பரிசோதனை தரத்தைக் கண்காணிக்கவும் முடியும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com