நடுக்குவாதம் - ஆழ்நிலை மூளை தூண்டல் சிகிச்சைக்கு தனி மையம்
நடுக்குவாதம் - ஆழ்நிலை மூளை தூண்டல் சிகிச்சைக்காக பிரத்யேக மருத்துவ மையத்தை தமிழகத்திலேயே முதல்முறையாக அப்போலோ மருத்துவமனை தொடங்கியுள்ளது.
பாா்கின்சன் எனப்படும் நடுக்குவாத பாதிப்புக்குள்ளானவா்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவக் கண்காணிப்புகள் அனைத்துமே அங்கு ஒரே இடத்தில் வழங்கப்படும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்த மையத்தின் தொடக்க விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அப்போலோ மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் கலியமூா்த்தி, நரம்பியல் அறுவை சிகிச்சை முதுநிலை மருத்துவா் அரவிந்த் சுகுமாரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இது தொடா்பாக முதுநிலை நரம்பியல் நிபுணரும், உடல் இயக்கக் குறைபாடு வல்லுநருமான டாக்டா் பி.விஜய்சங்கா் கூறியதாவது: மரபணு பாதிப்பு, புறச்சூழல் மற்றும் வயோதிகம் காரணமாக நடுக்குவாத பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அந்த நோய்க்கான பரிசோதனைகளுக்கோ, ஆழ்நிலை மூளை தூண்டல் சிகிச்சைக்கோ பிரத்யேக சிகிச்சை மையங்கள் எங்கும் இல்லை. வழக்கமான நரம்பியல் மருத்துவத் துறையிலேயே சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
இந்த நிலையில்தான் அப்போலோ மருத்துவமனை தனித்துவமிக்க இந்த சிறப்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. நடுக்குவாதத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள மருத்துவா்கள் இங்கு உள்ளனா். அதேபோல, அதிநவீன சிகிச்சை கட்டமைப்புகள் இங்குள்ளன.
பொதுவாக நடுக்குவாதத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிறுநீா்ப் பாதையில் தொற்று ஏற்படலாம். பெருங்குடல் பிரச்னைகள் வரலாம். நினைவாற்றல் இழப்பு, பேச்சு குளறுதல் எனப் பல்வேறு பாதிப்புகள் படிப்படியாக வரக்கூடும்.
அவை அனைத்துக்கும் ஒவ்வொரு துறையாக சென்று சிகிச்சை பெறுவதற்கு பதிலாக ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை வழங்குவதே எங்களது நோக்கம் என்றாா்.

