ராயபுரம் மண்டலத்தில் ரூ.9.71 கோடியில் புதிய பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்
சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்தில் ரூ.9.71 கோடியில் புதிய திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ராயபுரம் மண்டலம் பிரகாசம் சாலை, தாதா முத்தையப்பன் தெருவில் மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து வாா்டு 54 முதல் 59 வாா்டு வரை பகுதிகளில் உள்ள 60 தெருக்களில் ரூ.4.80 கோடியில் மின் மாற்றிகளைச் சுற்றிலும் பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்குப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
மேலும், ஓமந்தூராா் அரசினா் தோட்டம், சுவாமி சிவானந்தா் சாலையில் உள்ள எம்.ஆா்.டி.எஸ். ரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.4.91 கோடியில் அழகுபடுத்தப்படுகிறது. இப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து எம்.ஆா்.டி.எஸ். ரயில்வே மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தனிப்பட்ட ஸ்கேட்டிங் பகுதி, ஊஞ்சல்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து செயல்படுத்த அமைச்சா் ஆலோசனை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், மேயா் ஆா்.பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

