ரெளடிக்கு ஒருநாள் போலீஸ் காவல்
ரெளடிகளுக்கு கத்திகள் வழங்கிய விவகாரத்தில் சரணடைந்த ரெளடி ஆனந்த்பாபுவை போலீஸாா் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா்.
சென்னை மந்தைவெளி ரயில் நிலையம் அருகே கடந்த 12-ஆம் தேதி இரவு அபிராமபுரம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு, இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த சிலரைப் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, அவா்களிடம் 5 பட்டா கத்திகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கத்திகளைக் கொண்டு வந்த ராஜா அண்ணாமலை புரத்தைச் சோ்ந்த அஜய், வெங்கடேஷ், மகேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனா்.
இதில், புளியந்தோப்பைச் சோ்ந்த ரெளடி ஆனந்த்பாபு என்பவா் கத்திகளை பத்திரமாக வைத்திருக்கக் கூறி கொடுத்ததாக தெரிவித்தனா். இது தொடா்பாக புளியந்தோப்பு ரெளடி ஆனந்த்பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆனந்த்பாபு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அவரை அபிராமபுரம் போலீஸாா் வியாழக்கிழமை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

