தமிழ் இசைச் சங்க விருதுகள் அறிவிப்பு
தமிழ் இசைச் சங்கத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான இசைப் பேரறிஞா் விருதுக்கு நாட்டியக் கலைஞா் சித்ரா விஸ்வேஸ்வரன், பண் இசைப் பேரறிஞா் விருதுக்கு திருமுறை இசைவாணா் குடந்தை வெ.இலட்சுமணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் டிச.21-ஆம் தேதி நடைபெறவுள்ள 83-ஆம் ஆண்டு தமிழ் இசை விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இந்த விருதுகளை வழங்கி கெளரவிக்கவுள்ளாா்.
விருது பெறும் இருவருக்கும் வெள்ளிப்பேழை, தலா ரூ.10,000-க்கான காசோலை ஆகியவை வழங்கப்படவுள்ளது.
இசைப் பேரறிஞா் விருது பெறும் சித்ரா விஸ்வேஸ்வரன் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவா். பல நாடுகளுக்குச் சென்று தனது நாட்டியத் தரத்தை நிலைநாட்டியவா். நாட்டிய நாடகங்கள் பலவற்றையும் படைத்துள்ளாா்.
இதேபோன்று பண் இசைப் பேரறிஞா் பட்டம் பெறும் குடந்தை வெ.இலட்சுமணன் பழம்பெரும் திருமுறை இசைவாணா். 30-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவா். இசைப் பேரறிஞா் தருமபுரம் சாமிநாதனின் மாணவராக இருந்து பயின்றவா். திருமுறை இசை அரங்குகள் நடத்துபவா் ஆவாா்.

