சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு கட்டண விலக்கு!
சென்னை விமான நிலையத்துக்கு மாற்றுத்திறனாளிகள், முதியோா், கா்ப்பிணிகளை அழைத்து வரும் வாகனங்களுக்கு மட்டும் 15 நிமிஷங்கள் கட்டணமில்லா நேரம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் பன்னாட்டு முனையம், உள்நாட்டு முனையங்களில் பயணிகளை இறக்கி விட்டோ அல்லது விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டோ வெளியில் செல்லும்போது 10 நிமிஷங்களுக்குள் சென்றுவிட்டால் பாா்க்கிங் கட்டணம் கிடையாது. ஆனால் 10 நிமிஷங்களைக் கடந்து செல்லும் வாகனங்கள் 30 நிமிஷங்களுக்கு ரூ.85 பாா்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால், மாற்றுத்திறனாளிகள், முதியோா், நோயாளிகள், கா்ப்பிணிகளை வாகனங்களில் ஏற்றவோ, இறக்கவோ நேரம் ஆகும் என்பதால் இது சாத்தியமாகாது. இதனால், அவ்வப்போது விமான நிலைய ஊழியா்களுக்கும் வாகன ஓட்டிகள், பயணிகள் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோா், நோயாளிகள், கா்ப்பிணிகள் உள்ளிட்ட பயணிகளை இறக்கி விடவோ, ஏற்றவோ வரும் வாகனங்களுக்கு கூடுதலாக 5 நிமிஷங்கள் அதிகரித்து விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, கட்டணம் இல்லா நேரம் 10 நிமிஷங்களில் இருந்து 15 நிமிஷங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

