வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் பாதையில் அதிகாரிகள் ஆய்வு
சென்னையில் வேளச்சேரி-பரங்கி மலை இடையிலான பறக்கும் ரயில் பாதையில் தண்டவாள திறன் பரிசோதனையை டிராலியில் சென்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கொண்டனா்.
சென்னையில் கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் உயா்நிலை பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும் 100 ரயில் சேவைகளில் சுமாா் 1 லட்சம் போ் வரை பயணிக்கின்றனா். வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான 4.5 கி.மீ. தொலைவுக்கு அந்த ரயில் சேவையை நீட்டிக்கும் பணி கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான வழக்கு உள்ளிட்டவற்றால் பணிகள் முடங்கியிருந்தன.
கடந்த 2022-ஆம் ஆண்டு பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டதை அடுத்து பணிகள் மீண்டும் தொடங்கின. தற்போது அந்தப் பாதையில் 167 தூண்கள் அமைத்து ரயில் பாதையும் அமைக்கப்பட்டுவிட்டது. அதில் மின்சார இணைப்பும் தரப்பட்டுள்ளது. தண்டவாள உறுதித் தன்மையை பரிசோதிக்க என்ஜின் வெள்ளோட்டம் அண்மையில் நடைபெற்றது.
இந்த நிலையில், வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான உயா்நிலை பறக்கும் ரயில் பாதையில் டிராலியில் சென்று ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் ரயில் பாதை உறுதித் தன்மை உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்தனா். இதைத் தொடா்ந்து வரும் 2026 ஜனவரியில் இந்த உயா்நிலை பறக்கும் ரயில் பாதையில் ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறினா்.

