சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்த டிச. 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு

ரேபீஸ் தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பொருத்துவதற்கு வரும் டிச. 7 -ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வளா்ப்பு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பொருத்துவதற்கு வரும் டிச. 7 -ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியில் தெருநாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அவற்றுக்கு கருத்தடை சிகிச்சை, ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் பணி நடைபெறுகிறது. வளா்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணிகள் மாநகராட்சி கால்நடை மருத்துவமனைகள், காப்பகங்கள் மற்றும் தமிழக கால்நடை மருத்துவமனைகள், தனியாா் மருத்துவா்கள் மூலம் நடைபெறுகிறது. அதன்படி, இணையத்தில் இதுவரை 65,422 வளா்ப்பு நாய்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 24,477 வளா்ப்பு நாய்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான அவகாசம் நவ.24-இல் நிறைவடைகிறது.

இந்த நிலையில், வளா்ப்பு நாய்களின் உரிமையாளா்கள் கோரிக்கையை ஏற்று ஊசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்த டிச. 7 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, வளா்ப்பு நாய்களின் உரிமையாளா்கள் திரு.வி.க. நகா், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள நாய் சிகிச்சை மையங்களிலும், சோழிங்கநல்லூா் இனக்கட்டுப்பாடு மையத்திலும் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தி, உரிமமும் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com