ரயிலில் கைவிடப்பட்ட 9 மாதக் குழந்தை மீட்பு

ரயிலில் கைவிடப்பட்ட 9 மாதக் குழந்தை மீட்கப்பட்டது பற்றி...
Published on

கேரளத்திலிருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் கைவிடப்பட்ட 9 மாதக் கைக் குழந்தையை ரயில்வே பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

கேரள மாநிலம் ஆழப்புழையில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு விரைவு ரயில் வந்தது. அதில், 9 மாத பெண் குழந்தை யாருமின்றி இருப்பதாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையிலான போலீஸாா் அந்தக் குழந்தையை மீட்டனா்.

ஆழப்புழையிலிருந்து கோவை வந்தபோது அந்தக் குழந்தை கைவிடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பயணிகள் ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் தெரிவித்தனா். அனைத்துப் பெட்டிகளில் இருந்தவா்களிடம் விசாரித்தபோதும், குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனிடையே, அந்த ரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்தை அடைந்த நிலையில், ரயில் பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்பு படையினா் விசாரித்தனா். இருப்பினும் குழந்தையை பற்றிய விவரங்கள் தெரியவரவில்லை. இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படை மகளிா் போலீஸாா் உதவியுடன் குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஆழப்புழை முதல் சென்னை வரை உள்ள ரயில் நிலைய கண்காணிப்புக் கேமரா காட்சிகளைச் சேகரித்து, அதன் அடிப்படையில் குழந்தையின் பெற்றோரை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com