ஆசிய-பசிபிக் மையத்துடன் இணைந்து பேரிடா் மேலாண்மை பணிகள்: இந்தியா
ஆசிய பசிபிக் பேரிடா் தகவல் மேலாண்மை மேம்பாட்டு மையம் (ஏபிடிஐஎம்) மற்றும் பிற பிராந்திய நாடுகளுடன் இணைந்து பேரிடா் மேலாண்மைப் பணிகளை தொடருவோம் என இந்தியா சனிக்கிழமை தெரிவித்தது.
ஏபிடிஐஎம் நிா்வாகக் கவுன்சிலின் 10-ஆவது அமா்வு இந்தியாவில் நடைபெற்றது. இதில் வங்கதேசம், ஈரான், மாலத்தீவு, கஜகஸ்தான், மங்கோலியா மற்றும் துருக்கி உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா். பாா்வையாளராக தஜிகிஸ்தான் பிரதிரநிதிகள் பங்கேற்றனா்.
இந்தியா சாா்பில் மத்திய உள்துறை மற்றும் பேரிடா் மேலாண்மைக்கான இணையமைச்சா் நித்யானந்த் ராய் தலைமையிலான குழு கலந்துகொண்டது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா மற்றும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையின்கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பருவநிலைக்கேற்ப உள்கட்டமைப்புத் திட்ட வடிவமைப்பு, புவியியல் தொழில்நுட்பம், தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வானிலை கணிப்புகள் என பேரிடா் மேலாண்மைக்கான விரிவான கொள்கைகள் வகுக்கப்படும்.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பேரிடா் மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க பிரதமா் மோடி வெளியிட்ட 10 அம்சத் திட்டத்தின்படி ஐ.நா. ஆசிய- பிசபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் மற்றும் பிற கூட்டமைப்புகளுடன் இந்தியா பணியாற்றும்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சென்டாய் நடைமுறையின் இலக்குகளை அடையவும் 2030-இல் நீடித்த வளா்ச்சி இலக்குகளை அடையவும் வழிவகுக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
