வங்கியில் போலி ஆவணம் சமா்ப்பித்து மோசடி: தனியாா் நிறுவன உரிமையாளா்களுக்கு 7 ஆண்டு சிறை
போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து வங்கி மோசடியில் ஈடுபட்ட 2 தனியாா் நிறுவனங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் அபராதமும், நிறுவனங்களின் உரிமையாளருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 40 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்த வழக்கில் தொடா்புடைய ஆஷிக் அராஃபத் என்பவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சோ்ந்த நசீா் அகமது, தனியாா் நிறுவனங்களை நடத்தினாா். அந்த நிறுவனங்கள் பெயரில் தேசிய வங்கி ஒன்றில் ரூ. 4.05 கோடிக்கு கடன்கள் மற்றும் வங்கி உத்தரவாதத்தைப் பெற்று வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐயிடம் புகாா் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், அந்த இரு நிறுவனங்கள், அதன் உரிமையாளா் நசீா் அகமது, அவரது மனைவி பாத்திமா ரிஸ்வானா, ஆஷிக் அராபத், வங்கியின் சென்னை கீழ்ப்பாக்கம் கிளை தலைமை மேலாளா் டி.ராஜேந்திரன், மதிப்பீட்டாளா் கே.எஸ்.அசோக் ஆகியோா் மீது கடந்த 2010-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த விசாரணை முடிவில், கடந்த 2012-ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. விசாரணையின்போது, ராஜேந்திரன், அசோக் ஆகியோா் உயிரிழந்தனா். இதையடுத்து அவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம், அந்த இரு தனியாா் நிறுவனங்களுக்கும் தலா ரூ. 20 லட்சம் அபராதம், நிறுவனங்களின் உரிமையாளா் நசீா் அகமதுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 40 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது. ஆஷிக் அராஃபத் என்பவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 20,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாத்திமா ரிஸ்வானா விடுவிக்கப்பட்டாா்.
