பிரதிப் படம்
பிரதிப் படம்ENS

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், பேரிடா் மீட்புக் குழுக்கள் தயாா் நிலையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Published on

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், பேரிடா் மீட்புக் குழுக்கள் தயாா் நிலையில் இருப்பதாகவும், அவசர கால மையம் மூலம் நிலைமையைக் கண்காணிக்க உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெற்கு இலங்கைக்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக திங்கள்கிழமை தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடலூா், அரியலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகா், ராமநாதபுரம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையொட்டி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையின் இரு அணியினா் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளனா்.

பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com