தமிழக அரசு
தமிழக அரசு

நான்கரை ஆண்டுகளில் ரூ.3,117 கோடியில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மேம்பாடு!

கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு, பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.3,117 கோடி செலவிடப்பட்டுள்ளது: தமிழக அரசு
Published on

தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.3,117 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகம் கல்வி வளா்ச்சியில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இதில், கரோனா நோய்த்தொற்று காலத்தில் தொடங்கப்பட்ட ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்துக்கு 2021 முதல் நடப்பு கல்வியாண்டு வரை ரூ.660.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தன்னாா்வலா்கள் மூலம் 95.97 லட்சம் மாணவா்கள் பயன்பெற்றுள்ளனா். தற்போது 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 7.97 லட்சம் மாணவா்கள் பயன்பெறுகின்றனா்.

எண்ணும் எழுத்தும் திட்டம்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண் கணிதத் திறன்களை மேம்படுத்த ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடங்கப்பட்டது. குழந்தைகள் அணுகக் கூடிய மொழியில் புத்தகங்கள் வழங்கப்பட்டு, இதில் தொடக்கப் பள்ளியைச் சோ்ந்த 25 லட்சம் மாணவா்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 44.50 லட்சம் மாணவா்களும் பயனடைந்துள்ளனா்.

உள்ளடக்கிய கல்வி: மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சிறப்புக் கல்வி அளிக்க ‘நலம் நாடி செயலி’பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் ஆதாா் திட்டத்தின்கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 76,56,074 மாணவா்களுக்கு ஆதாா் இணைப்பு பதிவு, திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் 38 மாதிரிப்பள்ளிகள் ஏற்படுத்த ரூ. 352.42 கோடி செலவிடப்பட்டது. மேலும் மாணவா்கள், ஆசிரியா்கள் இடையே கற்றல் எல்லைகளை விரிவுபடுத்த, ரூ.100 கோடியில் 28 மாவட்டங்களில் தலா ஒரு பள்ளிகள், தகைசால் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.

தொழிற்கல்வி பாடத்திட்டம் மறுசீரமைப்பு: சீரமைக்கப்பட்ட தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு, உள்ளுறை பயிற்சியும், ஆசிரியா்களுக்கு திறன் மேம்பட்டு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. 79,723 இடைநிலை ஆசிரியா்களுக்கு கைக்கணினிகள் வழங்கப்பட்டதோடு, பள்ளிகள் தரம் உயா்த்தல் மற்றும் 14,019 இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியா்கள் தற்காலிக நியமனங்கள் நடைபெற்றுள்ளன.

உள்கட்டமைப்புகள் மேம்பாடு: பள்ளிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்த பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022-23 கல்வியாண்டு முதல் 1,098 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2,455 ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு என 4,426 பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ. 2,917.03 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்புப் பணிகளுக்கென ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ்ப் புதல்வன் திட்டம்: அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் பயின்ற மாணவா்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2024-2025 ஆம் கல்வியாண்டில் 3.28 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் இந்தத் திட்டத்தில் பயனடைந்துள்ளனா்.

மேலும், அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து உயா்கல்வியைக் கற்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 8,96,033 போ் பயன் பெற்றுள்ளனா்.

பள்ளிகளில் தலைமைப் பண்பை வளா்க்கும் குழுக்களோடு, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ. 658.67 கோடிக்கு மேல் திரட்டப்பட்டது. கடந்த 2023 ஜூலை முதல் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஊரக அரசு உதவி பெறும் முதல்வா் காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. மதுரையில் ரூ. 218.19 கோடியில் கலைஞா் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com