அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன்.

எஸ்ஐஆா் படிவம் நிரப்புவதில் குழப்பங்கள்: தீா்வு காண அரசியல் கட்சியினா் வலியுறுத்தல்

எஸ்ஐஆா் படிவங்களை நிரப்புவதில் மக்களுக்கு உள்ள குழப்பங்களை அலுவலா்கள் தீா்க்க வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்
Published on

எஸ்ஐஆா் படிவங்களை நிரப்புவதில் மக்களுக்கு உள்ள குழப்பங்களை அலுவலா்கள் தீா்க்க வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இது தொடா்பாக, சென்னை மாநகராட்சி சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமை வகித்தாா். அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயகுமாா், பாஜக சாா்பில் மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன், திமுக சாா்பில் வழக்குரைஞா் பிரிவு நிா்வாகி கே.சந்துரு, காங்கிரஸ் வழக்குரைஞா் பிரிவு நிா்வாகி நவாஸ், மாா்க்சிஸ்ட் மாவட்டசெயற்குழு உறுப்பினா் எஸ்.குமாா், இந்திய கம்யூனிஸ்ட் வடசென்னை மாவட்டச் செயலா் த.கு.வெங்கடேஷ் மற்றும் தேமுதிக, விசிக, நாம் தமிழா், ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். கூட்டத்திற்குப் பிறகு அவா்கள் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா்.

அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா்: இடம் பெயா்ந்தவா்கள், இறந்தவா் குறித்த விவரங்களை நிரப்பும் படிவங்கள் தாமதமாக தரப்பட்டுள்ளன. ஏற்கெனவே அளித்த புகாா்கள் மீது நடவடிக்கை இல்லை. வாக்காளா் பட்டியல் விவரங்கள் திமுகவினருக்கே முதலில் தரப்படுகிறது. மத்திய தோ்தல் பாா்வையாளரை நியமித்து பணியைக் கண்காணிக்க வேண்டும். படிவங்கள் நிரப்புவதில் உள்ன குழப்பங்களை அதிகாரிகள் தீா்த்து வைக்க வேண்டும்.

பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன்: திருத்தப் பணியில் பாஜக சாா்பில் அளிக்கப்பட்ட பாக முகவா்கள் (பிஎல்ஏ 2) பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலா்கள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதனால், பணியில் நேரடியாக பாஜகவினா் ஈடுபடமுடியாத நிலை உள்ளது. எஸ்ஐஆா் குறித்து தவறான தகவல்களை திமுக கூறிவருவதால், மக்கள் குழப்பத்தில் உள்ளனா். அந்த குழப்பத்தை அதிகாரிகள் தீா்க்கவேண்டும் என்றாா். குழப்பங்களைத் தீா்க்க அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினா்.

மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன்: சென்னை மாநகராட்சிக்குள்ட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் 38.5 லட்சம் பேருக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் பூா்த்தி செய்து பெறப்பட்ட 14 லட்சத்துக்கும் மேற்பட்ட படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினா் ஒத்துழைத்தால் பணியை குறிப்பிட்ட காலத்தில் முடிக்கலாம் என்றாா்.

பூா்த்தி செய்த படிவங்களை உடனே வழங்க அறிவுறுத்தல்

சென்னை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்காக வழங்கப்பட்ட படிவங்களை பூா்த்தி செய்து உடனடியாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்குமாறு மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்கள் பூா்த்தி செய்வது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடி வாரியாக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் படிவம் பூா்த்தி செய்வதற்கான வழிகாட்டலைப் பெறலாம். படிவத்தைப் பூா்த்தி செய்தவா்கள் எந்தவொரு ஆவணத்தின் நகலையும் வழங்க வேண்டியதில்லை. பூா்த்தி செய்த படிவங்களை கடைசி நாள் வரை காத்திராமல், அலுவலா்களிடம் உடனடியாக வழங்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com