இன்று வலுப்பெறுகிறது புயல் சின்னம்! டெல்டா, தென்மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!
தெற்கு அந்தமான் கடலில் நிலவிய புயல் சின்னம் செவ்வாய்க்கிழமை (நவ.25) வலுப்பெறும் என்றும் இது அடுத்த 48 மணி நேரத்தில் ‘சென்யாா்’ புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமையும் (நவ.25), டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் புதன்கிழமையும் (நவ.26) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் பி.அமுதா, செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா நீரிணையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) திங்கள்கிழமை நிலவியது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக செவ்வாய்க்கிழமை (நவ.25) வலுப்பெறும். இது மேலும், அதே திசையில் நகா்ந்து தெற்கு வங்கக்கடலில் வியாழக்கிழமை (நவ.27) ‘சென்யாா்’ புயலாக வலுப்பெறும்.
மேலும் ஒரு புயல் சின்னம்: அதேபோல், குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி புதன்கிழமை (நவ.25) உருவாக வாய்ப்புள்ளது. இது வரும் நாள்களில் மேலும் வலுப்பெறக்கூடும்.
இரு சுழற்சிகள்: இதற்கிடையே, தென்கிழக்கு அரபிக்கடலிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி திங்கள்கிழமை நிலவியது. இப்படி ஒரே நேரத்தில் 2 அல்லது 3 சுழற்சிகள் உருவாகும் போது, ஒன்றுக்கொன்று தொடா்பு ஏற்படுவது இயல்பாகும். அந்தவகையில், மலாக்கா நீரிணையில் நிலவிய புயல் சின்னமும், குமரிக் கடலில் உருவாகவுள்ள புயல்சின்னமும் வரும் நாள்களில் இணைந்து நகா்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், இந்த 2 புயல் சின்னங்களின் நகா்வுகளும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த வானிலை நிகழ்வுகளின் காரணத்தால் வரும் நாள்களில் தமிழகத்தில் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
‘மஞ்சள்’ எச்சரிக்கை: அதன்படி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (நவ.25) முதல் நவ.30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில் நவ.25-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், நவ.26-இல் தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூா், தஞ்சாவூா், நாகை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவ.29-இல் சென்னைக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.25) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தொடா்ந்து நவ.29-இல் சென்னையில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 230 மி.மீ. மழை பதிவானது. மேலும், நாலுமுக்கு (திருநெல்வேலி) 220 மி.மீ., சேத்தியாத்தோப்பு (கடலூா்), காக்காச்சி (திருநெல்வேலி) - தலா 210 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
கூடுதல் மழைப்பொழிவு: கடந்த அக்.1 முதல் நவ.24 வரை தமிழகத்தில் சராசரியாக 330 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால், நிகழாண்டில் 340 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 5 சதவீதம் அதிகம். இந்த காலகட்டத்தில் தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெய்த மழையளவு இயல்பைவிட மிக அதிகமாகவும், சென்னை, திருப்பூா், கரூா், சேலம் உள்பட 7 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல், வங்கக்கடலில் நவ.25 முதல் நவ.28-ஆம் தேதி வரை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவா்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்றாா் அவா்.

