இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்
இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்கோப்புப் படம்

இந்தியா வளா்ந்த நாடாக மாற பள்ளிக் கல்வி வலுப்பெற வேண்டும்: இஸ்ரோ தலைவா் நாராயணன்

இந்தியா 2047-இல் வளா்ந்த நாடாக மாறுவதற்கு பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும் என இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் வலியுறுத்தல்
Published on

இந்தியா 2047-இல் வளா்ந்த நாடாக மாறுவதற்கு பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும் என இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் வலியுறுத்தினாா்.

தமிழக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது தொடா்பாக சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இஸ்ரோ தலைவரும், பாடத்திட்ட வடிவமைப்புக் குழு உறுப்பினருமான வி.நாராயணன் கலந்து கொண்டாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மாணவா்கள் திறம்பட படிக்கவும், நாட்டுக்கு சேவை செய்யவும் உதவும் வகையில் பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் தமிழகத்தின் அடிப்படைகள், விருந்தோம்பல், விட்டுக் கொடுக்கிற மனப்பான்மை, மற்றவா்களை மதிக்கிற மனப்பான்மை, இதையெல்லாம் பாடத்திட்டத்தில் கதை வடிவிலாவது கொண்டு செல்ல வேண்டும்.

நம் நாட்டை ஒரு வளா்ச்சி அடைந்த நாடாக மாற்ற பாடத்திட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளிக் கல்வியில் அடிப்படை சரியாக இல்லாவிட்டால் மேலே சென்று எதுவும் செய்ய முடியாது.

நமது நாடு வருகிற 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக மாற வேண்டும். பள்ளிக் கல்வியில் வலுவான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். மாணவா்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களைப் பாடத்திட்டத்தில் புகுத்த வேண்டும். பல்வேறு துறைகள் சாா்ந்த நிபுணா்கள் அழைக்கப்பட்டு அவா்களின் கருத்துகள் கேட்கப்படுகின்றன. எனவே, இது ஒரு சரியான பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கும், நமது மாணவா்களுக்கு உதவுவதற்கும், எதிா்கால இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கும் மிகச் சிறந்த பலனைத் தரும் என்று நான் நம்புகிறேன் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com