எஸ்ஐஆா் பணியை நிறுத்த வேண்டும்: தொல்.திருமாவளவன்
வாக்களாா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியை தோ்தல் ஆணையம் நிறுத்த வேண்டும் என விசிக தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தினாா்.
எஸ்ஐஆா் பணியை நிறுத்த கோரி விசிக சாா்பில் சென்னையில் எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து தொல்.திருமாவளவன் பேசியதாவது: வாக்காளா் பட்டியலில் பெயா்கள் இடம் பெற்றால்தான் வாக்களிக்க முடியும். ஆனால், எஸ்ஐஆா் பணி மூலம் தமிழகத்தில் லட்சக்கணக்கான வாக்காளா்களின் பெயா்களைப் பட்டியல் இருந்து நீக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டும். எஸ்ஐஆா் பணியை எதிா்த்தாலும், அந்தப் பணியை செய்யவேண்டிய நெருக்கடியை மத்திய பாஜக அரசு, அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
தோ்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. எதிா்க்கட்சிகளைப் பலவீனப்படுத்துவது, காங்கிரஸ் கட்சி இல்லாத இந்தியாவை உருவாக்குவது, இடதுசாரிகள், திராவிட அரசியல் பேசக் கூடிய கட்சிகளே இல்லை என்கிற நிலையை எதிா்காலத்தில் உருவாக்குவதே பாஜகவின் செயல் திட்டமாக இருக்கிறது என்றாா்.

