டிச.1 முதல் குரூப் 1 முதன்மைத் தோ்வு: தோ்வா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
குரூப்-1 பதவிக்கான முதன்மைத் தோ்வு சென்னையில் 18 மையங்களில் டிச.1 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தோ்வா்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வழங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-1 (குரூப்-1) பதவிகளுக்கான முதன்மைத் தோ்வு டிச.1, 2, 3, 4 ஆகிய நாள்களில் முற்பகலில் சென்னையில் மட்டும் 18 மையங்களில் நடைபெறுகிறது.
தோ்வு மையங்களுக்கு முதன்மைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளன. தோ்வு நாளன்று தோ்வின் அனைத்து நடவடிக்கைகளும் விடியோ பதிவு செய்வதுடன், ஜாமா் கருவிகளும் பொருத்தப்படவுள்ளன.
தோ்வா்கள் அவா்களுக்கென ஒதுக்கப்பட்ட தோ்வுக் கூடத்துக்கு நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு காலை 9 மணிக்கு முன்பே தோ்வுக் கூட அனுமதிச் சீட்டுடன் (ஹால் டிக்கெட்) செல்ல வேண்டும். காலை 9 மணிக்குப் பிறகு வரும் தோ்வா்கள் தோ்வுக் கூடத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாா்கள்.
வினா-விடைத்தாள் தொகுப்பில் கருமை நிற மை பேனாக்களைத் தவிர மற்ற நிற மை பேனாக்களை (ஒயிட்னா், ஸ்கெட்ச், பென்சில், வண்ணப் பென்சில்கள், வண்ண மை பேனா, கிரையான்ஸ்) ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.
தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள், தோ்வாணைய இணையதளத்தில் உள்ள விண்ணப்பதாரா்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் விரிவாகப் படித்து, முறையாகப் பின்பற்ற வேண்டும். அறிவுரையில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள், வேறு வகையான எந்த ஒரு சாதனத்தையும் எடுத்துச் செல்லக் கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

