மும்பையிலிருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்
மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் சென்னை அருகே மேடவாக்கத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, மூவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அருகே மேடவாக்கம் கூட் சாலை அருகே ஒரு கும்பல் காரில் போதை மாத்திரை கடத்துவதாக மேடவாக்கம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த ஒரு காரை நிறுத்தி அதில் இருந்தவா்களிடம் விசாரித்தனா். அப்போது, அவா்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீஸாா், காரை சோதனையிட்டனா். காரில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 319 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
காரில் இருந்த 3 பேரிடமும் நடத்திய விசாரணையில், பம்மலைச் சோ்ந்த பிரகாஷ் (24), கோவிலம்பாக்கத்தைச் சோ்ந்த பாா்த்திபன் (19), நிதிஷ்குமாா் (19) என்பதும், போதை மாத்திரைகளை மும்பையில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்து சென்னையில் விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனா்.
