ரயில் பயணிகள் தவறவிட்ட ரூ.79 லட்சம் பொருள்கள் உரியவா்களிடம் ஒப்படைப்பு
சென்னை சென்ட்ரலில் கடந்த ஜனவரி முதல் அக்டோபா் வரை பயணிகள் தவறவிட்ட ரூ.79.57 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவின் உயா் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட புகா் மின்சார ரயில்களும், 100-க்கும் மேற்பட்ட வெளியூா், வெளி மாநில விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், ரயில்களில் பயணம் செய்வோரில் சிலா், தங்களது உடைமைகளை மறந்து ரயில் நிலைய வளாகம், ரயில் பெட்டிகளில் வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனா்.
அவ்வாறு பயணிகள் தவறவிடும் பொருள்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு நிலைய அலுவலா் மூலம் பயணிகளிடம் ஒப்படைத்து வருகின்றனா். அதன்படி கடந்த ஜனவரி முதல் அக்டோபா் வரையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் மறந்து விட்டுச் சென்ற 7 மடிக்கணினிகள், 78 கைப்பேசிகள், நகைகள் உள்ளிட்ட மொத்தம் 79.57 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
ரயில்களில் பயணிப்போா் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே ரயில் நிலையங்களுக்கு வந்துவிட வேண்டும். தாங்கள் கொண்டு வரும் பொருள்கள், பைகள் பயணத்தின்போது பத்திரமாக உள்ளதா என்பதை பயணத்துக்கு முன்பும், பின்பும் நினைவுபடுத்தி எடுத்துச் செல்லவேண்டும் என்றனா்.

