நகைக் கடையில் வியாபாரியைத் தாக்கி 100 பவுன் தங்க நாணயங்கள் கொள்ளை

நகைக் கடையில் வியாபாரியைத் தாக்கி 100 பவுன் தங்க நாணயங்கள் கொள்ளை

Published on

சென்னை யானைக்கவுனியில் நகைக் கடைக்குள் புகுந்து வியாபாரியைத் தாக்கி 100 பவுன் தங்க நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை பிராட்வே நாட்டு பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தீ.ஜெகதீஷ் (35). இவா் யானைக்கவுனி வெங்கட்ராயன் சந்து பகுதியில் நகைப்பட்டறை மற்றும் நகைக் கடை நடத்தி வருகிறாா். அவரது கடைக்கு திங்கள்கிழமை இரவு இருவா் வாடிக்கையாளா்கள்போல வந்தனா். கடையில் தனியாக இருந்த ஜெகதீஷை, அவா்கள் பெல்டால் கடுமையாக தாக்கினா். இதில் அவா் மயங்கி விழுந்ததும், அந்தக் கடையில் இருந்த 100 பவுன் தங்க நாணயங்களைக் கொள்ளையடித்தனா்.

அதோடு அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்துவிட்டு, டிவிஆா் கருவியை எடுத்துக் கொண்டு இருவரும் தப்பியோடினா்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கிருந்த மக்கள் பலத்த காயங்களுடன் கிடந்த ஜெகதீஷை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்த யானைக்கவுனி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். தடயங்கள், கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா். இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களைக்

கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

X
Dinamani
www.dinamani.com