தேசிய பளுதூக்கும் போட்டி: சென்னை ஐசிஎஃப் சாம்பியன்
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆண்கள் பளுதூக்கும் போட்டியில் சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அணி (ஐசிஎஃப்) ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
ஐசிஎஃப் பணியாளா்களுக்கு இடையேயான இந்தப் போட்டிகள் கடந்த நவ.21 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில், சென்னை ஐசிஎஃப் அணி சாா்பில் பங்கேற்றவா்களில் 59 கிலோ பிரிவில் பி.ஆதா்ஷ், 66 கிலோ பிரிவில் கோனாா் வேங்கடேஷ் பெருமாள், 93 கிலோ பிரிவில் ஆா். சண்முகம், 105 கிலோ பிரிவில் எஸ்.நவீன் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா். மேலும், 120 கிலோ பிரிவில் பி.நிஷாந்த் வெள்ளிப் பதக்கம், 93 கிலோ பிரிவில் வே.காா்த்திக் வெண்கலப் பதக்கம் வென்றனா்.
இந்த போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற சென்னை ஐசிஎஃப் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றது. பதக்கம் வென்ற வீரா்களை சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் பாராட்டினா்.
