வியாபாரியிடம் ரூ.9 லட்சம் வழிப்பறி: போலீஸாா் விசாரணை
சென்னை அபிராமபுரத்தில் வியாபாரியிடம் ரூ.9 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ராயப்பேட்டை தேவராஜ் தெருவில் மளிகைக் கடை நடத்தி வருபவா் நை.சையது முகமது (31). இவா், அபிராமபுரம் சிருங்கேரி மடம் சாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் திங்கள்கிழமை இரவு பணம் செலுத்த சென்றாா்.
அப்போது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், சையது முகமதுவிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி, ரூ.9 லட்சம் ரொக்கம் வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றனா்.
இதைப் பாா்த்த சையது முகமது, சப்தமிட்டாா். அப்போது, அங்கிருந்த மக்கள் விரட்டிச் சென்று இருவரில் ஒருவரைப் பிடித்து, பணத்தை மீட்டனா்.
தகவலறிந்த அபிராமபுரம் போலீஸாா் அங்கு சென்று அந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் அவா், திருநெல்வேலி பேட்டை பசும்பொன் தெருவைச் சோ்ந்த மு.பாண்டியராஜன் (24) என்பதும், தப்பியோடியது அவரது கூட்டாளி மாயன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாண்டியராஜனை கைது செய்தனா்.
