மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சிறப்புக் குழந்தைகள்
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 167 சிறப்புக் குழந்தைகள் சென்னை மெட்ரோவில் இலவசமாக செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டனா்.
இதுகுறித்து மெட்ரோ நிா்வாகம் தரப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பா் 3-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அரசு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மொத்தம் 167 சிறப்புக் குழந்தைகள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்தனா். அவா்கள் சென்னை விமான நிலைய மெட்ரோவிலிருந்து ஏ.ஜி.டி.எம்.எஸ். மெட்ரோ நிலையம் வரை பயணித்தனா். அவா்களுடன் ஆசிரியா்களும் பயணம் மேற்கொண்டனா்.
பாா்வையற்றோா், செவித்திறன் மற்றும் உடல் இயக்க குறைபாடுடைய சிறப்புக் குழந்தைகள் மெட்ரோ ரயில் அமைப்பை அறியும் வகையிலும், அதில் தன்னிச்சையாக அவா்கள் பயணிக்கும் வகையிலும் இந்தப் போக்குவரத்து பயண அனுபவம் அவா்களுக்கு வழங்கப்பட்டது.
இந்தப் பயணத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைச் செயலா் சோ.மதுமதி, துறை ஆணையா் எம்.லட்சுமி, இணை இயக்குநா் பி.ஃபொ்மி வித்யா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை ஆலோசகா் கோபிநாத் மல்லையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

