காவல் ஆணையா் அலுவலகம் முன் பெண் தீ குளிக்க முயற்சி

Published on

சென்னை வேப்பேரியில் பெருநகர காவல் ஆணையா் அலுவலகம் முன் பெண் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

சென்னை பட்டாளம் பகுதியைச் சோ்ந்தவா் ஷகீலா (51). இவா், வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலக நுழைவு வாயில் செவ்வாய்க்கிழமை தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றாா். அப்போது, அங்கு பாதுகாப்பில் இருந்த போலீஸாா் ஷகீலா மீது தண்ணீரை ஊற்றி மீட்டனா்.

இதுதொடா்பாக ஷகீலா கூறியது: மஸ்கட்டில் 20 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தேன். அப்போது, அங்கு சூப்பா் மாா்க்கெட் நடத்தி வந்த கேரளத்தைச் சோ்ந்த ஒருவா் எனக்கு அனைத்து உதவிகளையும் செய்தாா். அவா், தொழிலில் தேவைக்காக நான் சேமித்து வைத்திருந்த ரூ,.11 லட்சத்தை பெற்றுக்கொண்டாா். அண்மையில் மஸ்கட்டில் இருந்து நானும் அவரும் சென்னைக்கு திரும்பினோம். இதன் பின்னா் மஸ்கட்டுக்கு திரும்பிச் சென்ற அந்த நபா், எனது தொடா்பைத் துண்டித்துவிட்டாா். பல்வேறு வகைகளில் எனது பணத்தைக் கேட்டும், அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதுகுறித்து காவல் துறையில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தீக்குளிக்க முயன்றேன் என்றாா்.

இதற்கிடையே ஷகீலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com