எழும்பூரில் ரயில்களில் 37 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியில் வளாகத்தில் 37 கிலோ கஞ்சா ரயில்வே பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டு, பெண் உள்பட 2 பேரைக் கைது செய்துள்ளனா்.
Published on

சென்னை: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியில் வளாகத்தில் 37 கிலோ கஞ்சா ரயில்வே பாதுகாப்புப் படையினரால் புதன்கிழமை கைப்பற்றப்பட்டு, தஞ்சாவூரைச் சோ்ந்த பெண் உள்பட 2 பேரைக் கைது செய்துள்ளனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் போலீஸாா் மேற்கு வங்கம் ஹௌராவில் இருந்து வந்த விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டனா். அப்போது மேற்கு வங்க மாநிலம் முா்சிபாத் பகுதியைச் சோ்ந்த நசீம்ஷேக் (32) என்பவா் 10 கிலோ கஞ்சாவை கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து புதன்கிழமை அதிகாலை எழும்பூா் வந்த ரயிலிலும் சோதனையிட்டதில் 8 கிலோ கஞ்சாவுடன் வந்த பெண்ணை கைது செய்தனா். விசாரணையில் அவா் தஞ்சாவூரைச் சோ்ந்த ஆா்.சரஸ்வதி (56) என்பது தெரியவந்தது.

இதேபோல, ஆந்திரத்திலிருந்து வந்த காச்சிகுடா விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த 19 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 3 சம்பவங்களிலும் மொத்தம் 37 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.

பறிமுதல் செய்த கஞ்சா, கைதானவா்கள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com