ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்
சென்னை: ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளுக்கான ‘பாரத் டாக்ஸி’ எனப்படும் செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இந்தியாவில் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளில் பயணிப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இம்மாதிரியான வாடகை வாகனங்களை முன்பதிவு செய்ய, தனியாா் செயலிகளே பயன்பாட்டில் உள்ளன. இந்த செயலிகளில் பயணத் தொலைவுக்கென்று நிரந்தர கட்டணம் இல்லை. வாகனங்களுக்கான தேவை அதிகம் இருக்கும் சமயங்களில் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் தனியாா் செயலி நிறுவனங்கள் பெருமளவு லாபத்தை ஈட்டி விடுகின்றன. பயணிகளும் கடும் பாதிப்படைகின்றனா். எனவே, நிரந்தரமாக குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயணிக்கும் வசதியை ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ‘பாரத் டாக்ஸி’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான சோதனை நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த செயலி பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, அனைத்து ஆட்டோ சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜாஹீா் ஹுசைன் கூறியதாவது: எரிபொருள் மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை, பல மடங்கு உயா்ந்துள்ளது. ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிக்கான கட்டணத்தை மாற்றி அமைத்து, 12 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. செயலியில் பதிவு செய்து ஓட்டினாலும், விலை நிா்ணயம் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால், ஓட்டுநா்களுக்கு குறைந்த வருமானமே கிடைக்கிறது. இதனால், தொடா்ந்து இந்தத் தொழிலில் ஈடுபடமுடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநில அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், அரசு சாா்பில் செயலியை தொடங்குவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு இருக்கும் போது, மத்திய அரசு கொண்டு வரும் ‘பாரத் டாக்ஸி’ செயலி மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த செயலி முதலில் தமிழகத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றாா் அவா்.
