மெரீனா கடற்கரை விவகாரம்: வனத் துறை முதன்மைச் செயலா், மாநகராட்சி ஆணையா் ஆஜராக உத்தரவு
சென்னை: மெரீனா கடற்கரையில் சாலையோர வியாபாரத்தை நெறிப்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத விவகாரத்தில் வரும் டிச.10-ஆம் தேதி சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலா், சென்னை மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை மெரீனா கடற்கரையில் கடை ஒதுக்கக் கோரி திருவல்லிக்கேணியைச் சோ்ந்த தேவி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மெரீனா கடற்கரையில் சாலையோர வியாபாரத்தை நெறிப்படுத்த சென்னை மாநகராட்சியிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? சாலையோர வியாபாரிகளின் பிரச்னை எவ்வாறு தீா்க்கப்படுகிறது? இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலா், மாநகராட்சி ஆணையா், காவல் ஆணையருடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மெரீனா கடற்கரை மேம்பாட்டில் அரசு அக்கறை காட்டவில்லை. எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதை அமல்படுத்துவதில்லை. இது சரியான அணுகுமுறை இல்லை என்று கருத்து தெரிவித்தனா்.
பின்னா், இதுதொடா்பாக வரும் டிச.10-ஆம் தேதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலா், சென்னை மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

