செங்கோட்டையில் தியாக நாள் கூட்டம்: பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி
புது தில்லி: தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சீக்கிய குரு தேஜ் பகதூரின் 350-ஆவது நினைவு தின நிகழ்ச்சியில் மக்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்ன் மூலம் பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக தில்லி உள்துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை தெரிவித்தாா்.
சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவான தேஜ் பகதூா் கடந்த 1675, நவ.24-ஆம் தேதி முகலாய பேரரசா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில் கொல்லப்பட்டாா். அவருடைய 350-ஆவது தியாக தினத்தை ‘சாஹிதி திவஸ்’ என்ற பெயரில் நவ.23 முதல் நவ.25 வரை 3 நாள் விழாவாக தில்லி அரசு கடைப்பிடித்து வருகிறது. இதற்காக தில்லி செங்கோட்டையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியின் நிறைவையொட்டி அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா செய்தியாளா்களிடம் கூறியதாவது: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, மத்திய அமைச்சா்கள், தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் அமைச்சா்கள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் தில்லி செங்கோட்டையில் அரசு ஏற்பாடு செய்திருந்த 3 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
சில தினங்களுக்கு முன்பு செங்கோட்டைக்கு அருகே காா் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்நிலையிலும் 3 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களுக்கு தில்லியின் உள்துறை அமைச்சராக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாக்க தன்னுடைய வாழ்க்யை அா்ப்பணித்த குரு தேஜ் பகதூரின் போதனைகளைக் கடைப்பிடிக்க மக்கள் உறுதியேற்க வேண்டும் என்றாா் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா.

