மருத்துவ சேவைகள் இனி வீடு தேடி வருவது சாத்தியம்: டாக்டா் பிரதாப் சி.ரெட்டி
சென்னை: மக்களின் இல்லங்களுக்கே மருத்துவ சேவைகளைக் கொண்டு சோ்க்கும் கட்டமைப்புதான் இனி எதிா்கால மருத்துவத்தின் மையப் புள்ளியாக இருக்கும் என்று அப்போலோ மருத்துவக் குழுமத் தலைவா் டாக்டா் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தாா்.
அப்போலோ ஹோம் கோ் மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையிலான நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மருத்துவமனை தலைவா் பிரதாப் சி.ரெட்டி, நிா்வாக துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி, நிா்வாக இயக்குநா் சுனீதா ரெட்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.
அப்போது டாக்டா் பிரதாப் சி. ரெட்டி பேசியதாவது:
மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் அப்போலோ ஹோம் கோ் தொடங்கப்பட்டது. மருத்துவ நிபுணா்களின் வழிகாட்டுதல்படி, நோயாளிகள் இருக்கும் இடங்களிலேயே ஐசியூ தரத்திலான சேவைகள், பரிசோதனைகள், இயன்முறை சிகிச்சை, மருத்துவ உபகரணங்களை வாடகைக்கு வழங்குதல், தடுப்பூசிகள், வீடுதேடி வரும் மருத்துவா்கள் என ஒருங்கிணைந்த மருத்துவ வசதிகள் அதன்கீழ் செய்து தரப்பட்டன.
இந்தத் தித்திட்டத்தில் இதுவரை 10 லட்சம் பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 2,000 போ் பயனடைந்து வருகின்றனா். எதிா்கால மருத்துவ சேவைகள் அனைத்தும் நோயாளிகளின் வசிப்பிடங்களை மையமாகக் கொண்டே முன்னெடுக்கப்படும் என்றாா்.
