உயா்நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள்-காவல் துறையினா் மோதல் வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனு: இன்று தீா்ப்பு
சென்னை: உயா்நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினா் மற்றும் வழக்குரைஞா்கள் இடையே நிகழ்ந்த மோதல் சம்பவம் தொடா்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனு மீது சென்னை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை (நவ. 27) தீா்ப்பளிக்க உள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்துக்கு வந்த அப்போதைய ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்குரைஞா்கள் சிலா் தாக்குதல் நடத்த முயற்சித்தனா். இந்த வழக்கில் வழக்குரைஞா்களைக் காவல் துறையினா் கைது செய்ய முயன்றபோது, இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.
கடந்த 2009 பிப். 19-ஆம் தேதி நிகழ்ந்த இந்த மோதலில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் தாக்கப்பட்டனா். உயா்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. காவல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக, உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
எழும்பூா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி 28 வழக்குரைஞா்கள், 4 காவல் துறை அதிகாரிகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுக்கள் நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, வழக்குரைஞா்கள் தரப்பில் ஆஜரான சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன், தங்களது தரப்பு எழுத்துபூா்வ வாதங்களை தாக்கல் செய்தாா். இந்த மோதல் சம்பவத்தின்போது, நிகழ்ந்த அனைத்தையும் தானும் ஒரு வழக்குரைஞராக நேரில் கண்டதாக அவா் குறிப்பிட்டாா்.
இதையடுத்து, இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வியாழக்கிழமை (நவ. 27) தீா்ப்பு அளிக்கப்பட உள்ளது.
