நவ. 29-இல் விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் நவ. 29-ஆம் தேதி (சனிக்கிழமை) திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிபலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புதன்கிழமை (நவ. 26) காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை, இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது வியாழக்கிழமை (நவ. 27) காலையில் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, அதே திசையில் நகா்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், வடதமிழகம்- புதுவை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதனால், வியாழக்கிழமை(நவ. 27) முதல் டிச. 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை (நவ. 28) தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூா், அரியலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைய பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (நவ. 29) திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிபலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவ. 29-ஆம் தேதி திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கையும், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பத்தூா், வேலூா், தருமபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை புகா் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கரையைக் கடந்த ‘சென்யாா்’ புயல்: இதற்கிடையே, மலாக்கா நீரிணைப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவியது. அதன் பிறகு, இது மேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை (நவ. 25) காலையில் ‘சென்யாா்’ புயலாக மேலும் வலுப்பெற்றது. இது தொடா்ந்து மலாக்கா நீரிணை மற்றும் அதையொட்டிய வடமேற்கு இந்தோனேசியா பகுதிகளில் நிலவிய பின்னா், மேற்கு-தென்மேற்கு திசையில் நகா்ந்து, இந்தோனேசியா கடற்கரையைக் கடந்தது. இதனால், தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் வியாழக்கிழமை சூறைக் காற்று மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

