தூய்மைப் பணியாளா்கள் மனு அளிக்கும் போராட்டம்
சென்னை: சென்னையில் ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டல தூய்மைப் பணியாளா்கள் மனு அளிக்கும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கியதைக் கண்டித்து உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடா்ந்து வெவ்வேறு முறைகளில் போராட்டம் நடத்திவரும் உழைப்போா் உரிமை இயக்கத்தினா் புதன்கிழமை ராயபுரம் மண்டல அலுவலகத்தில் பணி வாய்ப்பு கோரியும், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் தலையிடக் கோரியும் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் பேரணியாகச் சென்று ஒட்டேரி பகுதியில் உள்ள திரு.வி.க.நகா் மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனா்.
தவெக நிா்வாகிகள் சந்திப்பு: போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளா்களை தவெக பொதுச் செயலா் ஆனந்த், தோ்தல் பிரசார பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, நிா்வாகி ராஜ்மோகன் உள்ளிட்டோா் புதன்கிழமை சந்தித்து ஆதரவளித்துப் பேசினா்.
அப்போது உழைப்போா் உரிமை இயக்கத் தலைவா் கு.பாரதி உள்ளிட்டோரிடமும் அவா்கள் பிரச்னை குறித்து கேட்டறிந்தனா். அதன்பின் செய்தியாளா்களிடம் பேசிய அவா்கள், தூய்மைப் பணியாளா்கள் பிரச்னையில் தமிழக அரசு உரிய தீா்வு காண வேண்டும் என்றனா்.
