தக்காளி கிலோ ரூ.110
தக்காளி கிலோ ரூ.110

தக்காளி கிலோ ரூ.110, முருங்கைக்காய் ரூ.400!

சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கும், ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Published on

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கும், ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் மட்டுமன்றி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும், ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில நாள்களாக வரத்து மேலும் குறைந்ததால், தக்காளி மற்றும் முருங்கைக்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி மொத்த விற்பனையில் தக்காளி கிலோ ரூ.80-க்கும், இரண்டாம் தரம் ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல, ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒருகிலோ முருங்கைக்காய், தற்போது ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை விற்பனையில் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.110 வரையும், கிலோ முருங்கைக்காய் ரூ.380 முதல் ரூ.400 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர பிற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளன.

அதன்படி, ரூ.30-க்கு விற்பனையான கிலோ உருளைக்கிழங்கு ரூ.50-க்கும், ரூ.50-க்கு விற்பனையான கிலோ சின்ன வெங்காயம் ரூ.90, ரூ.30-க்கு விற்பனையான கிலோ கேரட் ரூ.50, ரூ.25-க்கு விற்பனையான கிலோ வெண்டைக்காய் ரூ.60, ரூ.30-க்கு விற்பனையான கிலோ பச்சை மிளகாய் ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்டது. மழைக்காலம் முடியும் வரை இந்த விலை உயா்வு நீடிக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com