ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பிணையை ரத்து செய்யக் கோரிய மனு ஒத்திவைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவா்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Published on

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவா்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு அவரது வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் பிரபல ரௌடி நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன் உள்பட 27 போ் கைது செய்யப்பட்டனா். இருவா் தலைமறைவாக உள்ளனா். வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாா்.

இந்த வழக்கை உயா்நீதிமன்ற தனிநீதிபதி சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டாா். இதை எதிா்த்து தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனிடையே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் பிணை வழங்கியது.

தனக்கும் பிணை வழங்கக் கோரி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதேபோல், அஸ்வத்தாமன் உள்பட 12 பேருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியும் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த இரண்டு மனுக்களும் நீதிபதி கே.ராஜசேகா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி தரப்பில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு பிணை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது காவல்துறை தரப்பில், மனுதாரருக்கு பிணை வழங்கினால் சாட்சிகளைக் கலைக்கக் கூடும். சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், 12 பேருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த இரண்டு மனுக்களும், பிணையை ரத்து செய்யக் கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் சோ்த்து விசாரிக்கப்படும் எனக்கூறி விசாரணையை டிசம்பா் மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com