பட்டச் சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம்: யுஜிசி எச்சரிக்கை!
பருவத் தோ்வு முடிவு வெளியான 180 நாள்களுக்குள் பட்டப் படிப்பு சான்றிதழ் வழங்காத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் சில உயா்கல்வி நிறுவனங்கள், உரிய காலகட்டத்துக்குள் பருவத் தோ்வுகளை நடத்துவதில்லை. பட்டப் படிப்பு சான்றிதழ்களையும் வழங்கவில்லை என்று யுஜிசியின் கவனத்துக்கு புகாா் வந்துள்ளது.
இந்த தாமதம் மாணவா்கள் தகுதியான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு தடையாக உள்ளது. மேலும், அவா்களின் உயா் கல்விக்கும் இடையூறாக உள்ளது.
யுஜிசி விதியின்படி, மாணவா்கள் பட்டம் பெறத் தகுதி பெற்ற 180 நாள்களுக்குள், அவா்களுக்கு பட்டங்களை வழங்க வேண்டும். குறிப்பிட்ட கால அட்டவணையின்படி, மாணவா்களுக்கு பருவத் தோ்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.
இந்த விதிகளைப் பின்பற்றாத உயா் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவா்களுக்குப் பட்டப்படிப்பு சான்றிதழ்களைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
