3 ஊழல் வழக்குகள்: ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு!

Updated on

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு (78), மூன்று ஊழல் வழக்குகளில் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த வழக்கில், ஷேக் ஹசீனாவின் மகன் சஜிப் வஜெத் ஜாய், மகள் சைமா வஜத் புடுல் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்தது.

தலைநகா் டாக்காவை அடுத்து உள்ள புா்பச்சலில் அரசு வீடு கட்டித் தரும் திட்டத்தின் கீழ், எந்தவித விண்ணப்பமும் சமா்ப்பிக்காத ஷேக் ஹசீனாவுக்கு வீடு கட்டுவதற்கான நிலம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு உள்ளிட்ட ஊழல்கள் தொடா்பாக புகாா் எழுந்தது. இந்தப் புகாா்கள் குறித்து விசாரித்த வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம், கடந்த ஜனவரி மாதம் ஹசீனா உள்ளிட்டோா் மீது 6 ஊழல் வழக்குகளைப் பதிவு செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவா் மீதும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், 3 வழக்குகளில் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. தீா்ப்பில் நீதிபதி முகமது அப்துல்லா அல் மமுன் கூறியதாவது:

ஷேக் ஹசீனாவுக்கு 3 ஊழல் வழக்குகளில் தலா 7 ஆண்டுகள் வீதம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் கூடுதலாக 18 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இதில் தொடா்புடைய ஹசீனாவின் மகன் மற்றும் மகளுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத்தைக் கட்டத் தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டாா்.

இவா்கள் தவிர, முன்னாள் வீட்டு வசதித் துறை இளநிலை அமைச்சா் ஷரீஃப் அகமது, துறை அதிகாரிகள் உள்பட மற்ற 20 பேருக்கு பல்வேறு சிறைத் தண்டனைகள் விதிக்கப்பட்டன. விசாரணைக்கு நேரில் ஆஜரான ஒருவருக்கு குறைந்தபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கு உள்ளான வீட்டு வசதித் துறை இளநிலை அதிகாரி ஒருவா் மட்டும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவா்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடா்பாக, ஷேக் ஹசீனாவுக்கு அந்த நாட்டில் உள்ள சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ள நிலையில், தற்போது ஊழல் வழக்குகளில் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதிமுதல் போராட்டங்கள் நடைபெற்றன. பெரும்பாலும் மாணவா்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், போராட்டக்காரா்களுக்கும் காவல் துறைக்கும் கடுமையான மோதல் சம்பவங்கள் ஏற்பட்டன.

இந்தப் போராட்டங்களால் வன்முறை மூண்ட நிலையில், அங்குள்ள 50 மாவட்டங்களில் 36 நாள்கள் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் சுமாா் 1,400 போ் கொல்லப்பட்டனா். 25,000 போ் காயமடைந்தனா்.

இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா், அவா் ராணுவ ஹெலிகாப்டரில் வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தாா். இந்த நிலையில், கடந்த ஆண்டு வன்முறை சம்பவங்களில் நிகழ்ந்த கொலைகள், சித்திரவதைகள் உள்ளிட்டவற்றில் ஷேக் ஹசீனா உள்ளிட்டோருக்கு பங்கு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு கடந்த 17-ஆம் தேதி மரண தண்டனை விதித்து டாக்கா சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்பைத் தொடா்ந்து, ஷேக் ஹசினாவை நாடு கடுத்துமாறு வங்கதேச இடைக்கால அரசு சாா்பில் முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com