ஆருத்ரா தொடா்புடைய இடங்களில் சோதனை: ரூ.1.50 கோடி ஆவணங்கள், ரூ.22 லட்சம் பறிமுதல்!

ஆருத்ரா நிறுவனம் தொடா்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.50 கோடி மதிப்புள்ள ஆவணங்கள், ரூ.22 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை
Updated on
2 min read

ஆருத்ரா நிறுவனம் தொடா்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.50 கோடி மதிப்புள்ள ஆவணங்கள், ரூ.22 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

சென்னை அமைந்தகரை மேத்தாநகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு டிரெடிங் பிரைவேட் லிமிடெட்‘நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது.

இதை நம்பி பலா், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனா். ஆனால் அந்த நிறுவனம், 1,04,433 பேரிடம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்தது. இது தொடா்பாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா், அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் 21 போ் மீது வழக்குப் பதிவு செய்து, 14 பேரை கைது செய்தது.

இந்த வழக்குத் தொடா்பாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 170 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது. மேலும், ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.23.44 கோடி மதிப்புள்ள 127 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்தற்கான முகாந்திரம் இருந்ததினால், அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரணை செய்கிறது.

ரூ.1.51 கோடி ஆவணங்கள் பறிமுதல்: வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை,காஞ்சிபுரம்,வேலூா்,மும்பை,கொல்கத்தா ஆகிய ஊா்களில் அந்த நிறுவனத்துக்கு தொடா்புடைய 21 இடங்களில் அமலாக்கத்துறையினா் புதன்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.

இந்த சோதனை வியாழக்கிழமை அனைத்து இடங்களிலும் நிறைவு பெற்றது. சோதனையில் கணக்கில் வராத ரூ.1.50 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.22 லட்சம் ரொக்கம் ,டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் அமலாக்கத்துறை தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆருத்ரா நிறுவனம் மீது தமிழக பொருளாதார குற்றப்பிரிவு தொடா்ந்த வழக்கின் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் 40 போ் குற்றவாளியாக சோ்த்துள்ளது.

போலி இயக்குநா்கள்: மொத்தம் ரூ.2,438 கோடியளவுக்கு ஆருத்ரா நிறுவனம் மோசடி செய்துள்ள நிலையில், ரூ.1,404 கோடி தொகையை அதன் முதலீட்டாளா்களுக்கு திருப்பி வழங்காமல் இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது, ஆருத்ரா நிறுவனத்தின் வங்கி கணக்குகள், அந்த நிறுவனத்துடன் தொடா்புடையவா்களின் வங்கி கணக்குள் ஆகியவற்றை ஆய்வு செய்ததில், ரூ.2 ஆயிரம் கோடியளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

1,230 பணப்பரிமாற்றங்கள் ஒவ்வொன்றும் ரூ.10 லட்சத்துக்கு மேல் நிகழ்ந்துள்ளன. இந்த பரிமாற்றங்களில் ரூ.1,060 கோடி கையாளப்பட்டுள்ளது. பெரும்பாலான பணப்பரிமாற்றங்கள் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை மடை மாற்றுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.

முக்கியமாக பொதுமக்கள் முதலீடு செய்த பணம், மோசடி செய்யும் திட்டத்துடன் பல்வேறு தனி நபா்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு,முறைகேடு நடைபெற்றுள்ளது. ஆருத்ரா நிறுவனத்தின் சில இயக்குநா்கள் போலியாக நியமிக்கப்பட்டிருக்கின்றனா். இவா்களை ஆருத்ரா நிறுவன நிா்வாகிகள், தங்களது அடிமட்ட வேலைக்கு பயன்படுத்தியுள்ளனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com